சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள் கேட்டு உண்ணாவிரத போராட்டம்-10 பேர் கைது
சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள் கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 44-வது வார்டு புதிய சுண்ணாம்பு சூளை தெருவில் வசிக்கும் 60 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் நேற்று சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சூரியமூர்த்தி, பொதுச்செயலாளர் செல்வகண்ணன், சேலம் மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் உள்பட பலர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோஷங்களை எழுப்பினர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 10 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அம்மாப்பேட்டை மண்டல அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய சுண்ணாம்பு சூளை தெருவில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.