கோவில், மதுக்கடையில் திருடிய 2 பேர் கைது
காரைக்குடி அருகே கோவில், மதுக்கடையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மது போதையில் திருடியது தொடர்பாக உளறியதால் போலீசில் சிக்கினர்.
காரைக்குடி
காரைக்குடி அருகே கோவில், மதுக்கடையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மது போதையில் திருடியது தொடர்பாக உளறியதால் போலீசில் சிக்கினர்.
மதுபோதையில் உளறல்
காரைக்குடி அருகே சங்கந்திடலில் உள்ள அய்யனார் கோவிலில் இரவில் மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் பூஜைக்கான வெள்ளிப்பொருட்கள், மடப்பள்ளியில் இருந்த பித்தளை சாமான்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கிடையே மதுக்கடை பாரில் 2 பேர் குடித்துவிட்டு மது போதையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர். அதாவது தாங்கள் எப்படி திருடினோம் என்பது தொடர்பாக பேசியதாக தெரிகிறது. இதை அங்கிருந்தவர்கள் கவனித்து இது தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.
2 பேர் கைது
அதன்பேரில் போலீசார் அந்த மதுக்கடை பாருக்கு சென்று அந்த 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெயன்பட்டியை சேர்ந்த நாடிமுத்து(வயது 20), தனுஷ்கோடி(32) ஆகியோர் என்பதும், அய்யனார் கோவிலில் திருடியதும் தெரியவந்தது. மேலும் இருவரும் பாதரக்குடி அரசு மதுபான கடையில் பூட்டை உடைத்து 2 மதுப்பெட்டிகளை திருடி, தங்கள் ஊரில் இருவரும் மது விருந்து நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து உண்டியலில் திருடிய பணம் மற்றும் பூஜைக்கான வெள்ளி பொருட்கள், பித்தளை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.48 ஆயிரம் ஆகும்.