மனைவியை கொன்று விட்டு தலைமறைவு: 5 ஆண்டுகளுக்கு பிறகு வடமாநில தொழிலாளி கைது

அந்தியூர் அருகே மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவான வடமாநில தொழிலாளியை 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-18 21:23 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவான வடமாநில தொழிலாளியை 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

மனைவி கொலை

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ரோஷீம்காஜீ (வயது 35). இவருடைய மனைவி கோபிநா (29). இவர்கள் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூரில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர்.

அப்போது ரோஷீம்காஜீக்கு மனைவி கோபிநாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு்ள்ளது. இதனால் அவர் அடிக்கடி மனைவியை கண்டித்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி அன்று கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரோஷீம்காஜீ செங்கல் சூளையில் கிடந்த மண்வெட்டியால் அடித்து கோபிநாவை கொலை செய்தார்.

கணவர் தலைமறைவு

கொலை நடந்ததும் ரோஷீம்காஜீ அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.. இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோஷீம்காஜீயை தேடி வந்தனர். மேலும் ரோஷீம்காஜீயை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது ரோஷீம்காஜீ சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருவதாக அந்தியூர் தனிப்படை பிரிவு போலீசாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் மாறுவேடத்தில் மேச்சேரி சென்று ரோஷீகாஜீயை கண்காணித்து வந்தனர்.

கைது

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அந்தியூர் கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். ரோஷீம்காஜீயின் மகள்கள் மற்றும் உறவினர்கள் அந்தியூர் அருகே உள்ள புது மேட்டூர் செங்கல் சூளையில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்