ஈரோட்டில் போதை ஊசி விற்ற 2 வாலிபர்கள் கைது; ரூ.1¼ லட்சம் பறிமுதல்

ஈரோட்டில் போதை ஊசி விற்ற 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-05-07 21:25 GMT

ஈரோட்டில் போதை ஊசி விற்ற 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

போதை ஊசிகள்

ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதியில் போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அங்கு சந்தேகத்துக்கு இடமாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய சோதனையில் மாத்திரைகள், ஊசிகள், கத்த கத்தையாக ரூ.500 நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அந்த வாலிபர்கள் அந்தியூர் தவுட்டுப்பாளையம் வேங்கையன் தெருவை சேர்ந்த வெங்கடேசனின் மகன் விக்னேஷ் (வயது 23), தவுட்டுப்பாளையம் நஞ்சப்பாவீதியை சேர்ந்த மூர்த்தியின் மகன் ஜீவானந்தம் (21) ஆகியோர் என்பதும், அவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதை ஊசியில் ஏற்றி போதை மருந்தாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதற்காக அவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாத்திரை, ஊசி போன்ற பொருட்களை வாங்கி வந்து ஈரோட்டில் அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து விக்னேஷ், ஜீவானந்தம் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மாத்திரைகள், ஊசிகள், போதை ஊசி விற்ற ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதில் விக்னேஷ் மீது ஏற்கனவே போதை ஊசி விற்ற வழக்கு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்