தோசை சுட்டு தராததால் ஆத்திரம்:மனைவி, மருமகள், பேத்தியை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது
மத்தூர்ல்:
தோசை சுட்டு தராததால் ஆத்திரத்தில் மனைவி, மருமகள், பேத்தியை கத்தியால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தோசை கேட்டு தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே என்.மோட்டூர் மேட்டு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாதம்மாள் (50). நேற்று முன்தினம் இரவு கணேசன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டில் இருந்த அவர் தனக்கு தோசை சுட்டு தரும்படி மனைவியிடம் கேட்டார். இதையடுத்து மாதம்மாள் 3 தோசை சுட்டு கொடுத்தார். பின்னர் கியாஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே கணேசன் தனக்கு மேலும் 3 தோசைகள் வேண்டும் என்று மாதம்மாளிடம் கேட்டார்.
கத்தியால் வெட்டினார்
அப்போது மாதம்மாள் கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டது என்றும், இனிமேல் தோசை சுட முடியாது என கூறினார். அதற்கு கணேசன் தனக்கு விறகு அடுப்பில் தோசை சுட்டு தரும்படி கூறினார். இதற்கு பதில் அளித்த மாதம்மாள் தான் இப்போது தான் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்துள்ளேன். என்னால் சுட்டு தர முடியாது என கூறியதாக தெரிகிறது.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த கணேசன், மாதம்மாளை சரமாரியாக தாக்கினார். பின்னர் ஆத்திரத்தில் அங்கிருந்த கத்தியை எடுத்து மாதம்மாளின் தலை, கையில் வெட்டினார்.
3 பேர் படுகாயம்
அதை தடுக்க வந்த மருமகள் விஜயலட்சுமியையும் கணேசன் கத்தியால் வெட்டினார். அப்போது விஜயலட்சுமியின் மகள் 2 வயது குழந்தை தனிஷாவுக்கும் கத்தி வெட்டு விழுந்தது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
அவர்கள் படுகாயம் அடைந்த மாதம்மாள், மருமகள் விஜயலட்சுமி, பேத்தி தனிஷா ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் குழந்தை தனிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இதுதொடர்பாக விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி கணேசனை கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.