சேலம் தாதகாப்பட்டியில் தொழிலாளியிடம் வழிப்பறி; வாலிபர் சிக்கினார்
சேலம் தாதகாப்பட்டியில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த வாலிபர் சிக்கினார்.
அன்னதானப்பட்டி:
சேலம் லைன்மேடு சென்றாயன் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 21). வெள்ளிப் பட்டறை தொழிலாளி. இவர் நேற்று காலை 7 மணியளவில் வியாபாரம் விஷயமாக தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் பாலாஜியை திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு, தன்னை பிடிக்க வந்தவர்களை தாக்கி விட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது, அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் மேல் வீதியை சேர்ந்த ஸ்ரீநாத் (22) என தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் மீட்கப்பட்டதுடன், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.