வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி: போலி விசா கொடுத்து ஏமாற்றிய வட மாநிலத்தை சேர்ந்தவர் கைது

Update: 2023-02-10 18:45 GMT

தர்மபுரி:

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த வட மாநில நபரை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டு வேலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஈச்சம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29). இவருக்கு உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த குணால் தாஸ் என்பவர் சமூக வலைதளம் மூலம் அறிமுகமானார். ரூ.5 லட்சம் கொடுத்தால் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று குணால் தாஸ், விஜயகுமாரிடம் கூறியுள்ளார்.

இதை நம்பி விஜயகுமார் உள்ளிட்ட 8 பேர் குணால் தாசிடம் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.40 லட்சத்தை ஆன்லைன் மூலம் வழங்கினார். ஆனால் அவர் சம்பந்தப்பட்டவர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்துள்ளார்.

போலி விசா

இதுதொடர்பாக கேட்ட பின்பு விஜயகுமார், ஆரோக்கியசாமி, விஷ்ணுசந்து ஆகிய 3 பேரை குணால் தாஸ் துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற அவர்களுக்கு நியூசிலாந்து செல்வதற்கான விசாவை கொடுத்துள்ளார். ஆனால் அந்த விசா போலியானது என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தர்மபுரிக்கு திரும்பினர்.

இது தொடர்பாக விஜயகுமார் உள்ளிட்ட 3 பேரும் தர்மபுரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தொடர்பாக குணால் தாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

உத்திர பிரதேசத்தில் கைது

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது குணால் தாஸ் உத்திரபிரதேச மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் உத்திரபிரதேச மாநிலத்திற்கு சென்றனர். அங்கு குணால் தாஸ் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், தர்மபுரிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்