சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-29 23:08 GMT

பணம் பறிப்பு

சேலம் அழகாபுரம் குடிநீர் வடிகால் வாரிய காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த மாதம் ரெட்டியூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த கராத்தே ராஜா (வயது 39) என்பவர் ராமசாமியை வழிமறித்தார்.

பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2,650 மற்றும் 2 வெள்ளி தம்ளர்களை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதுதொடர்பாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடியான கராத்தே ராஜாவை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் மீது அழகாபுரம், கன்னங்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருந்ததும், கடந்த 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

குண்டர் சட்டத்தில் கைது

சேலம் நெத்திமேடு முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 4-ந் தேதி தனது தாயாருடன் மொபட்டில் நெத்திமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சேலம் டவுன் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (31) என்பவர் மணிகண்டனை வழிமறித்து கத்திமுனையில் 2 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் கடந்த 2015, 2018 மற்றும் கடந்த ஆண்டு அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த கராத்தே ராஜா, கிருஷ்ணகுமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்