தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நேரப்பிரச்சினை காரணமாக தனியார் பஸ்கள் மோதல்: 2 டிரைவர்கள், கண்டக்டர் கைது

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நேரப்பிரச்சினை காரணமாக தனியார் பஸ்கள் மோதிய சம்பவம் தொடர்பாக 2 தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர் என 3 பேர்கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-22 19:54 GMT

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நேரப்பிரச்சினை காரணமாக தனியார் பஸ்கள் மோதிய சம்பவம் தொடர்பாக 2 தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர் என 3 பேர்கைது செய்யப்பட்டனர்.

தனியார் பஸ்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு அரசு பஸ்சை விட அதிகளவில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தனியார் பஸ்களுக்கும் குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் தான் இடைவெளி உள்ளது. இதனால் பஸ்களை இயக்குவதில் போட்டா போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 2 தனியார் பஸ்களின் டிரைவர்களுக்கு இடையே பஸ்சை இயக்குவது தொடர்பாக நேரப்பிரச்சினை காரணமாக தகராறு எற்பட்டுள்ளது. இதையடுத்து பட்டுக்கோட்டையில் இருந்து 2 பஸ்களும் போட்டி போட்டுக்கொண்டு தஞ்சைக்கு அதன் டிரைவர்கள் இயக்கி உள்ளனர்.

பயணிகள் ஓட்டம்

பட்டுக்கோட்டை அருகே வந்த போது 2 பஸ் டிரைவர்களுக்கும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2 பஸ்களும் தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தன. அப்போது ஒரு பஸ் டிரைவர் தனது பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கி பின்னால் நின்ற மற்றொரு பஸ் மீது மோதினார். இதில் மோதிய பஸ்சின் கண்ணாடி உடைந்தது. மற்றொரு பஸ்சுக்கும் கண்ணாடி சேதம் அடைந்தது.

அதிர்ஷ்டவசமாக பஸ்களில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதையடுத்து தஞ்சை வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், 2 பஸ்களையும் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எடுத்து வந்தார். அந்த பஸ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

3 பேர் கைது

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ்களின் டிரைவர்களான பட்டுக்கோட்டையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33), ஒரத்தநாட்டை சேர்ந்த ராஜ்குமார் (28), கண்டக்டர் பாபநாசத்தை சேர்ந்த ராஜா (35) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட பஸ்சின் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக 2 பஸ் டிரைவர்கள், கண்டக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்"என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்