கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 4 பேர் கைது

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 4 பேர் கைது

Update: 2022-10-13 18:45 GMT

கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகில் தக்கடி- உஸ்தலஅள்ளி சாலையில் உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, கலைச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ அளவிலான 20 மூட்டைகளில் 1,000 கிலோ ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து வேனில் இருந்த மல்லஹள்ளி சிவராஜ் (வயது 25), உதுபரணி பாக்கியம் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் 2 பேர் கைது

இதேபோல் பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் போச்சம்பள்ளி அடுத்த எருமம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மரத்தடியில் 50 கிலோ அளவிலான 14 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசியுடன் நின்ற 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்திய சின்னகொத்தூர் முருகேசன் (33), இனாம்கோட்டப்பள்ளி முருகேசன் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்