தர்மபுரியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது-கண்காணிப்பு கேமரா பதிவால் சிக்கினர்

Update: 2022-09-15 19:00 GMT

தர்மபுரி:

தர்மபுரி பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கண்காணிப்பு கேமரா பதிவால் சிக்கினர்.

தொடர் சம்பவங்கள்

தர்மபுரி பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் மற்றும் பூட்டி கிடக்கும் கடைகள், தொழில் நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றை நோட்டமிட்டு அதன் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பது தர்மபுரி டவுன் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

இதையடுத்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, பெருமாள் மற்றும் போலீசார் திருட்டில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

3 பெண்கள்

இந்தநிலையில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்த தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையம், பென்னாகரம் ரோடு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 3 பெண்கள் பல்வேறு இடங்களில் சந்தேகப்படும் வகையில் நடமாடியது தெரியவந்தது.

இவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அந்த 3 பெண்களும் தர்மபுரி பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் அருகில் இருப்பது தெரிந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று, அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர்கள்

இந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மந்திதோப்பு பகுதியை சேர்ந்த இசக்கியம்மாள், ராணி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த திலகா ஆகியோர் என்பதும், இவர்கள் பஸ்கள் மற்றும் தனியாக செல்லும் பெண்களிடம் பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், அதனை பறிகொடுத்த பெண்களிடம் தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்