கத்தியை காட்டி வியாபாரியை மிரட்டி ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளை அடித்த 2 பேர் கைது- மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

கத்தியை காட்டி வியாபாரியை மிரட்டி ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளை அடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-08-14 22:34 GMT

ஈரோடு

கத்தியை காட்டி வியாபாரியை மிரட்டி ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளை அடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வியாபாரி

ஈரோடு வடக்கு திண்டல் மாருதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 54). தலைமுடி வியாபாரி. இவர் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு சிவன் கோவிலுக்கு சென்று ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை வாங்கி வியாபாரம் செய்வதற்காக வீட்டில் வைத்திருந்தார்.

கடந்த மாதம் 2-ந்தேதி சுதாகரின் செல்போன் எண்ணுக்கு ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது அந்த நபர் தனக்கு 35 கிலோ எடை உள்ள நீளமான தலைமுடி வேண்டும் என்றும், தங்களது வீட்டிற்கு வழி தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு சுதாகர் வில்லரசம்பட்டி வந்தவுடன் தனக்கு போன் செய்யுங்கள் வீட்டிக்கு அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.

தலைமுடி கொள்ளை

இதைத்தொடர்ந்து வில்லரசம்பட்டி வந்த அந்த நபரை அழைத்துக்கொண்டு சுதாகர் தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் அந்த நபர் தலைமுடியை பார்த்துவிட்டு, தனது முதலாளியிடம் கேட்டுவிட்டு தலைமுடியை வாங்குவதாக கூறி வெளியே சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து அந்த நபர் மேலும் 3 பேரை அழைத்துக்கொண்டு சுதாகர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அதன் பின்னர் 4 பேரும், சுதாகர் மற்றும் அவருடைய மனைவி, 2 மகன்களையும் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 7 மூட்டைகளில் இருந்த தலைமுடியை கொள்ளை அடித்துச்சென்றனர். இதைத்தொடர்ந்து சுதாகர் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் சுதாகர் வீட்டிற்குள் புகுந்து தலைமுடியை கொள்ளை அடித்துச்சென்ற 2 பேர் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சென்னை அம்பத்தூர் எஸ்.வி.நகர் கோபால் தெரு பகுதியை சேர்ந்த பொன் முருகன் (50), சென்னை செங்குன்றம் காட்டுநாயக்கன் நகர் பகுதியை சேர்ந்த பாபா முருகன் (50) என்பதும், இவர்கள் தான் சுதாகர் வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளை அடித்து சென்றது என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்