சேலத்தில் முன் விரோதத்தில் வாலிபரை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கும்பல்-ரவுடி உள்பட 3 பேர் கைது

சேலத்தில் முன் விரோதத்தில் வாலிபரை ஓடஓட விரட்டி அரிவாளால் ஒரு கும்பல் வெட்டியது. இதுதொடர்பாக ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-13 22:52 GMT

வெல்டிங் பட்டறை

சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 29). இவர் தமிழ்சங்கம் ரோடு பகுதியில் உள்ள ஒரு கார் வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். சீரங்கன்பாளையம் ராம் நகரை சேர்ந்தவர் ரவுடி சீரங்கன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், முரளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சீரங்கன் அவரை தாக்கினார்.

இதுகுறித்து முரளி அஸ்தம்பட்டி போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தன் மீது புகார் கொடுத்ததால் முரளி மீது சீரங்கன் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

அரிவாள் வெட்டு

இந்தநிலையில் நேற்று முன்தினம் சீரங்கன் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் முரளி வேலை பார்க்கும் பட்டறைக்கு வந்தது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்த 5 பேரும், அங்கிருந்த முரளியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் திடீரென அரிவாளால் அவரை வெட்ட முயன்றனர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முரளி பின்னர் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓடஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

3 பேர் கைது

அதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த முரளியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் முரளியை வெட்டியது தொடர்பாக பெரியபுதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30), தமிழ்செல்வன் (30), குமாரசாமிப்பட்டியை சேர்ந்த ரவுடி துரை (45) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சீரங்கன் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்