கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நாமக்கல்லில் கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான மேலும் ஒரு வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2022-08-09 15:57 GMT

நாமக்கல்:

கார் டிரைவர் குத்திக்கொலை

நாமக்கல் எம்.ஜி.ஆர். நகரில் ராசிபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரன் (வயது 29) என்பவர் கடந்த மே மாதம் 13-ந் தேதி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (27), அவரது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி (23), சபீன் (22), கற்பூர பிரியன் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இவர்களில் சுரேந்தர், கிருஷ்ணமூர்த்தி, சபீன் ஆகிய 3 பேரும் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மேதரமாதேவியை சேர்ந்த கற்பூர பிரியனையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் கற்பூர பிரியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை நாமக்கல் போலீசார், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கற்பூர பிரியனிடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்