காதலியுடன் எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபர் கைது

காதலியுடன் எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-16 19:30 GMT

மொரப்பூர்:

காதலியுடன் எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காதல்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வகுத்துப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 31). இவர், தினமும் வேலை தொடர்பாக சேலத்துக்கு பஸ்சில் வந்து செல்வது வழக்கம். அப்போது சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள வங்கியில் பணிபுரியும் பெண்ணுடன் சரவணனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சரவணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் அவரது நடவடிக்கையும் சரியில்லை என கூறப்படுகிறது. இதனால் இளம்பெண் சரவணனை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார்.

வாலிபர் கைது

இந்த நிலையில் சரவணன், அந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு என்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டால் நாம் எடுத்து கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் அந்த பெண் தனது செல்போன் எண்ணை மாற்றி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தந்தை சரவணனின் உறவினரிடம் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தன்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்று இளம்பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அவர் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்