ஓசூரில்ஆட்டு வியாபாரியை காரில் கடத்தி பணம் பறித்த 2 பேர் கைதுமேலும் 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூர்
ஓசூரில் ஆட்டு வியாபாரியை காரில் கடத்தி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆட்டு வியாபாரி
திருப்பத்தூர் மாவட்டம் புலியனேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது47). ஆட்டு வியாபாரி. இவர், நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் பகுதியில், ஆடுகளை விற்றவர்களிடம் ரூ.25 லட்சத்தை வசூலித்தார். பின்னர், பஸ்சில் ஓசூர் அருகே பத்தலப்பள்ளிக்கு அவர் வந்தார். அங்கு சாலையில் அவர் நடந்து சென்றார். அப்போது, மர்ம நபர்கள் அவரை காரில் கடத்தி சென்று ரூ.25 லட்சத்தை பறித்து கொண்டு உத்தனப்பள்ளி அருகே அகரம் கிராமத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டனர். .
இது குறித்து, சரவணன் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சூளகிரி அருகே காமன்தொட்டியை சேர்ந்த முருகன் மகன் நாகராஜ் (36), பத்தலப்பள்ளியை சேர்ந்த அப்துல் மாலிக் மகன் சாதிக் பாஷா (46) ஆகியோர் நண்பர்களுடன் ஆட்டு வியாபாரியை காரில் கடத்தி பணம் பறித்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இந்த சம்பவத்திற்கு சாதிக் பாஷா மூளையாக இருந்து செயல்பட்டதும், சரவணனை தீவிரமாக, கண்காணித்து பின்னர் தனது நண்பர்களுடன் காரில் கடத்தி ரூ.25 லட்சத்தை பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து ரூ.12 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.