தபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு-அதிகாரி தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-03 19:57 GMT

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மகளிர் உரிமைத்தொகை

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி அணுகுவதற்கு எளிதான, குறைந்த கட்டணங்களுடன் நகரங்கள் மற்றும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு எளிய வங்கி சேவை அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.

தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/ தபால்காரர்/ கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

தபால் நிலையங்களில் வங்கி கணக்கு

மேலும் தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை (இ.கே.ஒய்.சி.) மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும். இந்த கணக்கிற்கு இருப்புதொகை எதுவும் கிடையாது.

தகுதியுள்ள பயனாளிகள் மாதாந்திர உரிமை தொகையை அருகில் உள்ள தபால் நிலையங்களிலும், 'டோர் ஸ்டெப் பேங்கிங்' என்ற சிறப்பு சேவையின் வாயிலாகவும் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்று கொள்ள முடியும். அது மட்டுமல்லாது 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

எனவே பயனாளிகள் அனைவரும் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி, தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்