ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியில் குளறுபடி எதிரொலி - காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2023-09-12 07:37 GMT

சென்னை,

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியால் ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடநெம்மேலியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனமும் இந்த நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கூட்டம் அதிகமாக இருந்ததால் உரிய 'டிக்கெட்' இருந்தும் இருக்கைகள் இல்லாததால், நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் பல ரசிகர்கள் பணம் விரயமானது. மேலும், கார், பைக்குகளில் வந்த ரசிகர்கள் போதிய பார்க்கிங் வசதியின்றி தவித்தனர். மேலும், கூட்டத்தில் சிக்கி பெண்களும், குழந்தைகளும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதன் காரணமாக ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைக்குள் வருகிறது. எனவே இந்த குளறுபடி தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜூக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, சென்னை பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன், தென் சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் ஐபிஎஸ் அதிகாரி தீஷா மிட்டல் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்