வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த ராணுவ வீராங்கனைகள்
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ராணுவ வீராங்கனைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கயத்தாறு:
பெண்களை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி இந்திய துணை ரானுவப்படை வீராங்கனைகள் 140 பேர் கன்னியாகுமரியில் இருந்து குஜராத்துக்கு மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி செல்கின்றனர். நேற்று காலை கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு வந்தனர். இங்கு சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்திலும், அங்கு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கும் வீராங்கனைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் மீண்டும் பேரணியை தொடங்கினர்.
முன்னதாக அவர்களை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை மாலை அணிவித்து சால்வை போர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் ராஜதுரை, வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.