அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-29 19:07 GMT

அரியநாயகி அம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கீழாநிலைக் கோட்டையில் 84 ஊர் நாட்டார்களின் குலதெய்வமாக வழிபடும் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கன்னிமூல கணபதி, நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர் சமேத வள்ளி, தெய்வானை, கருப்பர், பைரவர், மாரியம்மன், முனீஸ்வரர் ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளது. இக்கோவிலை கற்கோவிலாக கட்ட விழா கமிட்டியினர் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து மாநிலத்திலேயே 7-வது மிகப்பெரிய கல்லால் ஆன கற்கோவிலை 84 ஊர் நாட்டார்கள், நாட்டு அம்பலக்காரர்கள், ஏத்தநாடு பழனியப்பன் அம்பலம், ராமநாதன் அம்பலம், கே.புதுப்பட்டி கணபதி அம்பலம், அரியநாயகி அம்மன் அறக்கட்டளை தலைவர் சுப.செல்லப்பன், தொழிலதிபர் பழ.படிக்காசு மற்றும் அரியநாயகி அம்மன் அறக்கட்டளை திருப்பணிக்குழு உறுப்பினர்கள் கட்ட முடிவு செய்தனர். அதன்படி பல கோடி ரூபாய் மதிப்பில் கற்களால் ஆன கோவில் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த விழா கமிட்டியினர் முடிவு செய்தனர்.

யாக சாலை பூஜைகள்

இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி மங்கல இசை அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, புன்னியாவாஜனம், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, தன பூஜை, தீபலட்சுமி பூஜை ஆகியவற்றுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தாமரை வடிவில் யாகசாலை அமைக்கப்பட்டு அதில் அம்மன் மற்றும் புனிதநீர் அடங்கி கலசங்கள் வைக்கப்பட்டு 26-ந் தேதி நவக்கிரக ஹோமத்துடன் முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. 27-ந் தேதி 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும், 28-ந் தேதி 4, 5-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. நேற்று காலை 5.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

இதைதொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு யானை முன்னே செல்ல செண்டை மேளம், மேள, தாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர். அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டு காட்சி அளித்தார்.

இதையடுத்து பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோவில் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமான கலசம், பரிவார ெதய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்தில் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் பெரியசாமி, ரகுபதி, கே.ஆர்.பெரிய கருப்பன், மெய்யநாதன், எம்.பி.க்கள் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, செந்தில்நாதன், ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., பாஸ்கரன், தொழிலதிபர்கள் மலர் பேப்பர் மில்ஸ் பாலசுப்பிரமணியன், பெரியசாமி, காரைக்குடி வித்ய விகாஸ் சத்தியன், ஜெய ஜெயா அக்ரோ புட்ஸ் கல்லூர் ராஜு, அப்பச்சி பிராண்ட் மாணிக்கவாசகம், அரியநாயகி அக்ரோ புட்ஸ் பள்ளத்தூர் சேகர், செட்டிநாடு மினரல் வாட்டர் ராமலிங்கம், சன் ரைஸ் வெள்ளைச்சாமி, அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர் கே.புதுப்பட்டி முருகன், ஸ்தபதி சந்தானகிருஷ்ணன், பத்திர எழுத்தர் ஏம்பல் முஜிபுர் ரஹ்மான், அரியநாயகி ஏஜென்சி சண்முகம், அய்யனார் மெஸ் விஸ்வநாதன், புதுவயல் விநாயகா மாடன் ரைஸ் மில் சாத்தப்பன், செந்தில்குமார், சுரேஷ், போடிநாயகம் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் திலக் குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அம்மன் வீதி உலா

கும்பாபிஷேக விழாவையொட்டி முன்னதாக கோவில் குடிமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் தட்டுகளில் பட்டு, பூக்கள், பழங்களை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் முன்வைத்து வழிபட்டனர்.

இதையடுத்து இரவு அரியநாயகி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். யாகசாலை நடைபெற்ற நாட்களில் சொற்பொழிவு, வயலின் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்