கடையின் பூட்டை உடைத்து பேட்டரி திருடியவர் கைது

Update: 2022-10-05 16:16 GMT


உடுமலையை அடுத்த கணபதி பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்.இவர் உடுமலை பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து கடையை திறக்க முயற்சித்த போது, கடையில் பூட்டப்பட்டிருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 10 புதிய பேட்டரிகள் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 20 பழைய பேட்டரிகள் திருடப்பட்டு இருந்தது.மேலும் கடையில் இருந்த மடிக்கணினியையும் மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றிருந்தனர். இதனையடுத்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரியைத் திருடிச்சென்றவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது திருப்பூர் காந்தி நகரைச் சேர்ந்த துரை (வயது 47) என்பது தெரியவந்தது.உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருட்டுப்போன பேட்டரிகளைக் கைப்பற்றினர். அவர் மீது ஏற்கனவே அவினாசி பாளையம், பல்லடம், ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட துரையை உடுமலை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி உடுமலை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்