நெல்லை மாநகராட்சியில் பகுதி சபா கூட்டம்
நெல்லை மாநகராட்சியில் பகுதி சபா கூட்டம் நடந்தது.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகராட்சியின் அனைத்து மண்டல பகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டங்கள் நடந்தது.
நெல்லை மாநகராட்சி 32-வது வார்டு பகுதி சபா கூட்டம், கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர் பிரான்சிஸ், பொறியாளர் தன்ராஜ். சுகாதார ஆய்வாளர் பெருமாள், சபா உறுப்பினர்கள் தங்கராஜ், அருள்ராஜ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகராட்சி 16-வது வார்டு பகுதியில் நடந்த சபா கூட்டத்திற்கு மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். 1-வது வார்டு தச்சநல்லூர் சாய்பாபா கோவில் வளாகத்தில் வைத்து நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். பகுதி சபா தலைவர் முத்துரங்கராஜ் முன்னிலை வகித்தார்.
பாளையங்கோட்டை மண்டலம் 5-வது வார்டு, சீவலப்பேரி ரோடு அண்ணா நகரில் வைத்து நடந்த சபா கூட்டத்திற்கு கவுன்சிலர் ஜெகநாதன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். உதவி ஆணையாளர் காளிமுத்து, பத்மராஜன், சபா செயலாளர் பொன்னுத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.