அரியலூரில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா?-நடைபயிற்சி செய்வோர் கருத்து

தெருநாய் பிரச்சினை ஏதோ தெருவில் உள்ள பிரச்சினையாக இல்லாமல் இன்றைக்கு தேசிய பிரச்சினையாகவே உருமாறி இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 12 பேர், தெருநாய் கடிக்கு அல்லது துரத்தலுக்கு ஆளாகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Update: 2023-04-23 18:46 GMT

அபரிமிதமான இனப்பெருக்கம்

தெருநாயின் சராசரி வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். 10 முதல் 12-வது மாதத்திலேயே நாய்கள் கருத்தரிக்கும் நிலையை அடைந்து விடுகிறது. ஒரு நாய் ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் 8 குட்டிகள் முதல் அதிகபட்சம் 16 குட்டிகள் போடும். இதனால் நாய்கள் இனப்பெருக்கம் அபரிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது.

ஆரம்ப காலத்தில் ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாகவும், இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லும் நிலை இருந்தது. காலப்போக்கில் ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாலும், விலங்கு நல வாரியத்தின் எதிர்ப்பாலும் நாய்களை கொல்லும் முறை கைவிடப்பட்டு, கருத்தடை செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. முன்பு நாய்களை சுறுக்கு வலை மூலம் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்தனர். அப்போது கழுத்து இறுக்கி நாய்கள் இறக்கும் நிலை ஏற்பட்டதால், தற்போது வலை மூலம் நாய்களை பிடிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கு அச்சுறுத்தல்

தெருநாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது நடைபயிற்சி செய்பவர்கள்தான். எந்திரமயமான இன்றைய வாழ்க்கையில் முறையற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் டாக்டர்கள் சொல்லும் முக்கிய ஆலோசனை, 'தினமும் நடைபயிற்சி செய்யுங்கள்' என்பதுதான்.

அதன்படி பூங்காக்கள், சாலையோர பகுதிகள் போன்ற இடங்களில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சிலர் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான விலையுயர்ந்த நாய்களையும் நடைபயிற்சியின்போது உடன் அழைத்து வருகிறார்கள். அப்படி ஆர்வமுடன் நடைபயிற்சிக்கு வருவோருக்கு தெருநாய்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. தெருநாய்களால் அச்சுறுத்தல் என்று ஒருபுறம் பொதுமக்களும், தெருநாய்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்று விலங்குகள் நல அமைப்பினர் இன்னொரு புறமும் புகார் அளிக்க சென்று கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் அரியலூரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து அன்றாடம் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களில் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

நடைபயிற்சிக்கு இடையூறு

அரியலூர் மாவட்டம் தா.பழூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேந்திரன்:- காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பார்க்கும் பொழுது சற்று அச்சமாகத்தான்இருக்கிறது. நடைபயிற்சியின் போது பல்வேறு பகுதிகளில் நாய்கள் குரைப்பதும், துரத்துவதுமாக நடைபயிற்சிக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இல்லாமல் அதிகளவு இருப்பது அனைத்து தரப்பு மக்களுக்குமே தொடர் பிரச்சினை தான். எனவே தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

பாதசாரிகள் அச்சம்

உடையார்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன்:- நடைபயிற்சி செய்வது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதால் நடக்கிறோம். இதற்கு தெருநாய்கள் இடையூறாக அமைகின்றன. ஒவ்வொரு தெருவிலும் 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. இவை வீதிகளில் கூட்டம் கூட்டமாக குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் பாதசாரிகள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. சில நேரங்களில் கையில் இருக்கும் உணவு பொருட்களை கவ்வி பிடிப்பதால் சிறுவர்கள் காயம் அடைகிறார்கள். மேலும் சாலையில் தனியாக நடந்து செல்லும் குழந்தைகள், முதியோர்கள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டிற்கு காவலாய் இருக்கும்

அரியலூர் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுரேஷ் கிறிஸ்டோபர்:- தெரு நாய்களில் அதிக ஆக்ரோஷமாக உள்ள நாய் தான் நடை பயிற்சி மேற்கொள்பவர்களை, சிறுவர்களை, முதியவர்களை, இருசக்கர வாகனத்தில் விரட்டி கடிக்க பாய்கிறது. மேலும் இந்த நாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளிலும் சிக்குகின்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தெரு நாய்களுக்கு வெறிநோய் பிடித்தால் நிறைய பேரை கடித்து விடும். தெரு நாய்களுக்கு கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. கருத்தடையும் இலவசமாக செய்யப்படுகிறது. இதற்கு தெரு நாய்களை பிடித்து கொண்டு வரவும், அதனை பராமரிக்கவும் அந்தப்பகுதி பொதுமக்கள், தன்னார்வலர்கள் முன்வர வேண்டும். கருத்தடை (குடும்ப கட்டுப்பாடு) அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை எங்கு பிடிக்கப்பட்டதோ, அந்த இடத்தில் கொண்டு விட வேண்டும். தெரு நாய்களில் முதலில் ஆண் நாய்களுக்கு தான் கருத்தடை செய்ய வேண்டும். கருத்தடை செய்யப்பட்ட ஆண் தெரு நாய்களை அதே பகுதியில் விட்டால் தான், அந்த பகுதிக்கு வேறு பகுதிகளில் இருந்து வரும் நாய்களை உள்ளே வர விடாது. இதனால் அந்த தெருவில் உள்ள பெண் நாய்களின் இனப்பெருக்கம் தடைபடும். நாய்களின் வாழ்நாள் 11 முதல் 13 ஆண்டுகள் ஆகும். வெளி நாட்டு நாய்களை வாங்கி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதை விட, நாட்டு நாய்களை வாங்கி வளருங்கள். தெரு நாய்களை எடுத்து வளர்த்து பாருங்கள், அவை வீட்டிற்கு காவலாய் இருக்கும். ஆரம்ப கட்டத்தில் அந்த நாய்களை சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். பின்னர் இருக்காது. நானும் தெரு நாயை ஒன்றை எடுத்து வளர்க்கிறேன். தெரு நாய்களை வளர்ப்போர்களை கண்டிக்காமல், உற்சாகம் படுத்துங்கள். அந்த நாய்கள் வளர்ப்போர்க்கு நாளடைவில் இன்றியமையாத தோழனாக மாறிவிடும். தற்போது மத்திய அரசு விலங்கு பிறப்பு கட்டுப்பாடு குறித்து சட்டத்தில் திருத்தம் செய்து கடந்து மாதம் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதில் நாய்களை 2 ஆக பிரித்துள்ளார்கள். அதில் ஒன்று தனிநபரால் வளர்க்கப்படும் நாய்கள் செல்ல பிராணிகள் என்றும், மற்றொன்று தெரு நாய்களை சமூக விலங்காக என்றும் பிரித்துள்ளது. தெரு நாய்களை கண்காணிக்கவும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் மாவட்டத்தில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த கண்காணிப்பு குழுவிற்கு நகராட்சி ஆணையாளர் தான் பொறுப்பு. இதனால் இனி வரும் காலங்களில் தெரு நாய்கள் பேணி பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்