திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா? பொதுமக்கள் கருத்து

திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Update: 2023-03-03 19:50 GMT

ஒரு வீட்டில் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணத் தேதி முடிவானால் போதும், அடுத்த முதல் வேலை கல்யாண கடிதாசி அச்சடிப்பதுதான். பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, மச்சான் என்று உறவுகளின் பெயர்களை அச்சிடுவது. அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு பழங்களுடன் நேரில் போய் அழைப்பிதழைக் கொடுப்பது.

அப்போது பேசாத உறவினர்கூட 'சரி.. அவன் நேரில் வந்து அழைத்துவிட்டான். கடிதாசிலும் பெயர் போட்டுவிட்டான்' என்று பழைய பகையை மறந்து விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்துவது என்று சுமுகமாக உறவுகளைப் புதுப்பிக்கும் விழாவாகத்தான் சமூகத்தில் திருமண விழாக்கள் பார்க்கப்பட்டன.

மாறிக்கொண்ட மக்கள்

இவ்வாறு நேரில் பார்த்து அழைப்பிதழை பூ பழத்துடன், வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுத்து உறவினர்களை 'கண்டிப்பா வந்துடுங்க...' என உரிமையுடன் அழைப்பது நமது மரபும் கூட.

ஆனால், இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டது. மாறி வரும் சூழலுக்கேற்பவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பவும் மக்களும் மாறிவிட்டார்கள். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் 'வாட்ஸ்-அப்', 'பேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் அழைப்பிதழை அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள். மாறி வரும் இந்த கலாசாரம் பற்றிய பொதுமக்கள் கருத்து என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

நேரில் சென்று அழைக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சரணிதா:- வீட்டு விசேஷங்களுக்கு உறவினர்களை நேரில் சென்று அழைப்பது என்ற நடைமுறை கிராமப்புறங்களில் தற்போதும் கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்கு உறவினர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து, குடும்பத்தோடு வர வேண்டும் என்று அழைத்தால்தான், அவர்களும் மகிழ்ச்சியுடனும், குடும்பத்துடனும் வருவார்கள். அதிலும் சில நெருங்கிய உறவினர்கள் வீட்டிற்கு, கணவன்-மனைவி சேர்ந்து நேரில் சென்று அழைத்தால் மட்டுமே வருவார்கள். இல்லையென்றால் உரிமையோடும், அன்போடும் கோபித்துக் கொள்வார்கள். காலத்திற்கு தகுந்தாற்போல் போனிலோ, வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவோ உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தால், பெரும்பாலானோர் வராமல் தவிர்த்து விடுவார்கள். எனவே கலாசாரம், மரபு மாறாமல் வீட்டு விசேஷங்களுக்கு நேரில் சென்று அழைப்பதுதான் சரியானது. நகர்ப்புறங்களில் இந்த மரபு மீறப்படலாம். ஆனால் கிராமப்புறங்களில் விசேஷங்களுக்கு உறவினர்களை நேரில் சென்று அழைப்பது அதிகரித்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்.

'வாட்ஸ்-அப்'பில் அழைப்பிதழ்

ஆலத்தூர் தாலுகா, கொளக்காநத்தத்தை சோ்ந்த விமல்:- முன்பெல்லாம் சிறிய விசேஷத்திற்கு கூட உறவினர்கள் வீடு தேடி வந்து அழைப்பார்கள். அப்படி அழைக்காவிட்டால், அவர்கள் குடும்பத்துடன் பேச்சுவார்த்தையை உறவினர்கள் நிறுத்தி விடுவார்கள். தற்போது திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வீடு தேடி வந்து நேரில் அழைப்பிதழ் கொடுப்பது குறைந்து வருகிறது. செல்போன் மூலம் விசேஷ நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கிறார்கள். மேலும் வாட்ஸ்-அப் மூலம் திருமண அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது. கேட்டால் நேரம் இல்லை என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு இன்றைய காலகட்டம் மாறியுள்ளது. திருமண அழைப்பிதழை வீடு தேடி வந்து நேரில் கொடுத்தால்தான் அந்த வீட்டிற்கு குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். வாட்ஸ்-அப் மூலம் திருமண அழைப்பிதழ் அனுப்பினால் கடமைக்கு வீட்டில் இருந்து ஒருவர் சென்று மொய் வைத்து விட்டு வந்து விட வேண்டும் என்று எண்ணம்தான் ஏற்படும். மேலும் சொந்தபந்தங்கள் இடையே இடைவெளி ஏற்பட்டுவிடும்.

மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

அரியலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் சங்கீதராஜன்:- திருமணம் போன்ற விசேஷங்களுக்கு உறவினர்கள் வீடு தேடி வந்து அழைக்கும்போது, அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. ஆனால் தற்போது இளைய தலைமுறையினர் பெரும்பாலும் அழைப்பிதழ்களை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். அதற்கு சிலர் சமூக வலைதளங்களிலேயே வாழ்த்து தெரிவித்து விடுகின்றனர். சிலரோ மொய்யை கூட, செல்போனில் செயலிகள் மூலம் அனுப்பி விடுகின்றனர். உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணம் போன்ற விசேஷங்கள் நடைபெறும்போது, அதனால் ஏற்படும் மகிழ்ச்சியே அலாதியானதுதான். அவ்வாறு அனைவரும் மகிழ்ச்சியோடும், உரிமையோடும் கலந்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கு நேரில் சென்று அழைப்பதுதான் முறையாகும். எனவே இளைய தலைமுறையினரும் பழமையான பழக்க, வழக்கங்களை பின்பற்ற வேண்டும். அதன்மூலம் உறவுகளும், நட்பும் பலப்படும்.

செல்போனில் அழைக்கின்றனர்

பாடாலூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால்:- முன்பெல்லாம் திருமணம் நடக்க ஒரு மாதம் முன்பே அனைத்து உறவினர்களும் முறையாக வீடு தேடிச்சென்று அழைக்கப்படுவார்கள். அவர்களும் உரிமையுடன் வந்து திருமணத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கலந்து பேசி முடிவு செய்வார்கள். வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். இதனால் திருமணம் போன்ற விசேஷ வீடுகள், விசேஷம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பிருந்தே கலகலப்பாக காணப்படும். ஆனால் தற்போது திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் உறவினர்கள் வீட்டிற்கு சென்று அழைக்கின்றனர். வெளியூர்களில் இருப்பவர்களில் மிக முக்கியமானவர்களை தவிர மற்றவர்களை நேரில் சென்று அழைக்கும் பழக்கம் மருவி வருகிறது. மேலும் இளம் தலைமுறையினரோ ஒரு படி மேலே போய், வாட்ஸ்-அப் போன்றவற்றில் அழைப்பிதழோ, குறுந்தகவலோ மட்டும் அனுப்புகின்றனர். அல்லது செல்போனில் அழைப்பு விடுகின்றனர். இதனால் உறவுமுறையில் ஒரு இடைவெளி ஏற்பட்டது போன்றாகும். எனவே வாட்ஸ்-அப் போன்றவற்றில் அழைப்பு விடுப்பதை தவிர்த்து, நேரில் சென்று முறையாக அழைப்பதுதான் அன்பையும், உறவுமுறையையும் வளர்க்க உதவும்.

முற்றிலும் மாறுபட்டது

விக்கிரமங்கலத்தை சேர்ந்த குடும்பத்தலைவி மகேஸ்வரி:- உறவினர்களின் வீட்டிற்கு நேரில் சென்று திருமண பத்திரிகையோடு வெற்றிலை, பாக்கு வைத்தும், நெருங்கிய உறவினர்கள் என்றால் அழைப்பிதழுடன் பணம் வைத்து அழைப்பதுதான் நடைமுறையில் உள்ள வழக்கம். அதுதான் உறவினர்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் திருமண அழைப்பிதழ்கள் போன்றவற்றை நேரில் கொடுக்கும் பழக்கம் மாறி வருகிறது. இது கலாசாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். செல்போனில் அழைப்பதும், அதற்கு பதிலாக செயலியில் மொய் அனுப்புவதும் நமது பண்பாட்டிற்கு எந்த வகையிலும் ஏற்றதல்ல. திருமணம் என்பது ஒரு விழா போன்று நடத்தப்படுவதாகும். இதில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்துவதோடு, நீண்ட காலம் பேசாத உறவினர்களுடன் கூட பேசி மகிழ்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. விசேஷங்களுக்கு நேரில் சென்று உறவினர்களை அழைக்க நேரமில்லை என்று கூறுவதும், நேரில் அழைப்பதை தவிர்ப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

வருந்தத்தக்கது

தா.பழூரை சேர்ந்த இளங்கோவன்:- முன்பு திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு விசேஷங்களுக்கு உறவினர்களை அழைக்க வீடு, வீடாக நேரில் சென்று பத்திரிக்கை வழங்குவார்கள். அதற்கேற்ப உறவினர்கள் அருகருகில் இருக்கக்கூடிய நகரங்களிலும், கிராமங்களிலும் நினைத்த உடனேயே சென்று பார்க்கும் வகையில் வாழ்ந்து வந்தனர். தற்போது அந்த நடைமுறை உள்ளது. ஆனால் தற்போது கடல் கடந்து தொழில் நிமித்தம், பணி நிமித்தம் சென்று வசிக்கும் குடும்பத்தினர் அதிகரித்து விட்டனர். கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி அதிகப்படியான மக்கள் குடிபெயர்ந்து வந்து விட்டனர். இதனால் தற்போது தொலைதூரத்தில் இருக்கும் அனைத்து உறவுகளையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க முடிவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவோ வீட்டு விசேஷங்களுக்கான அழைப்பிதழை அனுப்பி உறவினர்களை அழைக்கின்றனர். தவிர்க்கவே முடியாத சூழலில் இது சரிதான். ஆனால் பக்கத்து வீட்டிற்கு கூட இ-மெயிலில் அழைப்பிதழ் அனுப்பும் சூழ்நிலை உருவாகிவிட்டதுதான் வருந்தத்தக்கது.

அரியலூைர சேர்ந்த ஆனந்த்:- வீட்டில் விசேஷம் என்றால் அழைப்பிதழ் அச்சடித்து, அதன் ஓரங்களில் மஞ்சள் வைத்து, பெயர் எழுதி உறவினர்கள் உள்ளிட்டோர் வீட்டிற்கு நேரில் சென்று தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்குடன் அழைப்பிதழை வைத்து, அவர்களை விசேஷத்திற்கு அழைப்பதுதான் வழக்கம். இந்த வழக்கம் கிராமங்களில் மாறவில்லை. ஆனால் நகர்ப்புறங்களில் மாறி வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் நவநாகரிகம் என்ற பெயரில் வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் திருமண அழைப்பிதழை அனுப்புகிறார்கள். இதனால் விசேஷங்களுக்காக தற்போதைய அழைப்புகளில் ஒரு உயிரோட்டம் இல்லை. ஒரு சம்பிரதாய முறைப்படியே உள்ளது வருத்தமான விஷயம்.

மக்கள் கருத்து என்ன?

திருமண அழைப்பிதழ் மட்டுமின்றி, நிச்சயதார்த்தம், காதணி விழா, புதுமனைப் புகுவிழா, மஞ்சள் நீராட்டு, குழந்தைகள் பெயர் சூட்டுவிழா, அலுவலக திறப்பு விழா, பழைய நண்பர்கள் ஒன்றுகூடும் விழா என்பன உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் அழைப்பிதழ்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமாக நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பப்படுகின்றன. மொத்தத்தில், சமூக வலைதளங்களில் திருமண அழைப்பிதழ் அனுப்பும் போக்கை கைவிட வேண்டும் என்றும், அது கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுத்து விடும் என்றும் மக்கள் கருதுகின்றனர். இளைய தலைமுறையினர் இதனை பின்பற்றலாமே.

Tags:    

மேலும் செய்திகள்