குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளார்களா? ஊட்டியில் தோட்ட நிறுவனங்கள், கடைகளில் அதிகாரிகள் ஆய்வு- நாய் பண்ணையில் பணியாற்றிய 16 வயது சிறுவன் மீட்பு

தனியார் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா என்று தொழிலாளர் நலத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நாய் பண்ணையில் பணியாற்றிய 16 வயது சிறுவன் மீட்கப்பட்டார்.

Update: 2023-02-02 19:00 GMT

ஊட்டி

தனியார் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா என்று தொழிலாளர் நலத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நாய் பண்ணையில் பணியாற்றிய 16 வயது சிறுவன் மீட்கப்பட்டார்.

குழந்தை தொழிலாளர்கள்

மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்றும் நேற்று முன்தினமும் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி அமலாக்கம் சதீஷ்குமார் தலைமையில் ஊட்டி மற்றும் கேத்தி பகுதிகளில் தோட்ட நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களில் குழந்தை தொழிலாளர் பணிபுரிகிறார்களா என ஆய்வு நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு

இதில் ஊட்டி போன் ஹில் பகுதியில் நாய் பண்ணையில் பணியாற்றிய 16 வயது சிறுவன் மீட்கப்பட்டார். இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்டு பண்ணை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து உரிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஸ்குமார் கூறுகையில், குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் ஒழிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1986ன் படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது மற்றும் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் அமர்த்துவது குற்றமாகும். அவ்வாறு குழந்தை தொழிலாளர் பணியமர்த்தப்பட்டால் உரிமையாளருக்கு நீதிமன்றம் மூலம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 வருட சிறை தண்டனை இல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக www.pencil.gov.in என்ற இணையதளம் அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் 0423-2232108, சைல்டுலைன் 1098 ஆகியவற்றிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கோவையை சேர்ந்த அந்த சிறுவனை அங்குள்ள பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்