ஆரணி அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது

ஆரணியில் அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் ரூ.10 லட்சத்துக்கு கூலிப்படை அமைத்து தீர்த்து கட்டியது தெரியவந்தது.

Update: 2023-01-16 13:05 GMT

ஆரணி

ஆரணியில் அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் ரூ.10 லட்சத்துக்கு கூலிப்படை அமைத்து தீர்த்து கட்டியது தெரியவந்தது.

அ.ம.மு.க. பிரமுகர் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் பி.கோதண்டம் (வயது 68). இவர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட அவை தலைவராக இருந்தார்.

கடந்த 5-ந் தேதி ஆரணியில் இருந்து செய்யாறுக்கு சென்ற கோதண்டம் மாயமானதாக ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் 7-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜன், பி.புகழ், தயாளன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், ராஜீவ்காந்தி, கார்த்திகேயன், சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் அடையாளம் தெரியாத பிணம் கண்டெடுக்கப்பட்டதாகவும். பின்னர் அந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை செய்து புதைத்ததும் ஆரணி போலீசாருக்கு தெரியவந்தது.

இதையறிந்த ஆரணி போலீசார் மற்றும் கோதண்டத்தின் உறவினர்கள் ஆந்திரா சென்று சத்தியவேடு பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட கோதண்டத்தின் பிணத்தை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையை தொடர்ந்து கோதண்டம் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

சரண் அடைந்தார்

இந்த நிலையில் தனிப்படை போலீசார், கோதண்டத்தின் போன் உரையாடல்களை சைபர் கிரைம் பிரிவிலிருந்து பெற்று குற்றவாளிகளை நெருங்கி வந்தனர்.

இதையறிந்ததும் குற்றவாளிகள் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்றனர். மீண்டும் அவர்கள் சென்னை பகுதியில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்ததும் சென்னை நீலாங்கரை பகுதியில் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆரணி அருணகிரிசத்திரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்ற நாகேஷின் மகன் குமரன் என்பவர் ஆரணி கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் கொலைக்கு முக்கிய குற்றவாளியான ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த பாரி என்பவரின் மகன் சரவணன், கோதண்டத்திடம் 6.75 ஏக்கர் நிலம் மனைப்பிரிவு அமைப்பதற்காக கடன் பெற்றதாகவும் அந்த கடனை திருப்பி செலுத்தாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

ரூ.10 லட்சத்துக்கு கூலிப்படை

இந்த நிலையில் சரவணன், குமரனிடம் கோதண்டத்தை தீர்த்து கட்டிவிடலாம் என தெரிவித்து கடந்த மாதம் 23-ந் தேதி திட்டம் தீட்டி உள்ளார்.

அதற்காக கடந்த 3-ந் தேதி கும்மிடிப்பூண்டியில் வடமாநிலத்தைச் சேர்ந்தவரின் ஒருவரின் செல்போனை அபகரித்துள்ளனர்.

அந்த போன் மூலமாக, கோதண்டத்தை போன் செய்து வரவழைத்து மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை பகுதியைச் சேர்ந்த நேருஜி, குட்டி என்ற தணிகாசலம் ஆகியோரிடம் கோதண்டத்தின் படத்தைக் காட்டி அவரை தீர்த்துக்கட்ட ரூ.10 லட்சம் பேசி கூலிப்படை அமைத்துள்ளனர். இதற்கு அட்வான்ஸ் ஆக ரூ.2 லட்சமும் கொடுத்துள்ளனர்.

தீர்த்து கட்டிய பிறகு மீதம் தொகை தருவதாக தெரிவித்துள்ளனர்.

4 பேர் கைது

மேலும் விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், வினோத், வீரமணி ஆகிய மூவரும் செய்யாறில் இருந்து கோதண்டத்தை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

அழைத்து செல்லும்போதே கையால் கழுத்தை நெரித்து கொலை செய்து கோதண்டத்தின் உடலை ஆந்திர மாநிலம் சத்தியவேடு போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட தெலுங்கு-கங்கை கால்வாயில் வீசி உள்ளனர் என்பது தெரியவந்தது.

இது சம்பந்தமாக தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளிகளான சரவணன்(வயது 36), குமரன்(35), சென்னையை சேர்ந்த நேருஜி(42), குட்டி என்ற தணிகாசலம்(45) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

3 பேருக்கு வலைவீச்சு

காணாமல் போன பி.கோதண்டத்தை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த காவலர் சரவணன் தனிப்படையில் இணைக்கப்பட்டிருந்தார். அவர்தான் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பார் என, என்னிடம் தகவல் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தான் அவருடைய செல்போன் உரையாடல்கள் சைபர் கிராம் பிரிவில் இருந்து பெறப்பட்டு அவருடைய நடவடிக்கைகள் குறித்து தனிப்படை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

அதில் முக்கிய குற்றவாளிகள் 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 3 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்து முடித்த அனைத்து காவலர்களையும் நான் பாராட்டுகிறேன். மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக கொலைக்கு பயன்படுத்திய 2 வாடகை கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமாக மிரட்டல்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக என்னுடைய அலுவலகத்திற்கு 9159616263 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

புகார்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இது போன்ற கொலை வெறி தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்