அறங்கண்மாயில் நிரம்பி வழியும் தண்ணீர்

பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டியில் பெய்த கன மழையால் அறங்கண்மாயில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனை விவசாயிகள் தேங்காய் உடைத்து மலர் தூவி வரவேற்றனர்.

Update: 2022-08-29 18:17 GMT

பொன்னமராவதி:

அறங்கண்மாய் நிரம்பியது

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் பெய்து வரும் கன மழையால் கண்மாய்கள், நீர்நிலைகள் நிறைந்து வருகின்றது. அதிலும் எந்த ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்புவதை விவசாயிகள் அதிசயமாக பார்க்கின்றனர்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஏனாதி ஊராட்சி பிடாரம்பட்டி அறங்கண்மாயில் சமீபத்தில் பெய்து வரும் கனமழையால் கண்மாய் பெருகி கலிங்கியில் தண்ணீர் நிரம்பி செல்வதை விவசாயிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலர் தூவி வரவேற்றனர்

மேலும் கலிங்கி வழியாக செல்லும் தண்ணீரை விவசாயிகள் தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து, சூடம் ஏற்றி வருண பகவானை வணங்கி மலர் தூவி வரவேற்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் விவசாயிகள் ஆவணி மாதத்தில் நெற்பயிரிட விதைப்பு ஆரம்பித்ததை பாதியுடன் நிறுத்திவிட்டனர்.

வயல்வெளிகள் முழுவதும் நீர் நிறைந்துள்ளதால் விவசாயிகள் விவசாயம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக எந்த ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து செல்வதை விவசாயிகள் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்

பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் பகுதியில் பெய்த கனமழையால் ஆலவயலிலிருந்து சாத்தங்காடு வழியாக மலையாண்டி நகர் செல்லும் வழியில் பள்ளி மாணவர்கள் செல்ல முடியாத அளவிற்கு மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து சாலையை சரி செய்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வர ஏதுவாக வழிவகை செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்