பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற மாலதி தெரிவித்தார்.
பொறுப்பேற்பு
தமிழகம் முழுவதும் 42 மாவட்ட வருவாய் அலுவலர்கள் கடந்த மாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த ராமமூர்த்தி சென்னை- கன்னியாகுமரி தொழில் போக்குவரத்து திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளராக (திருச்சி) பணியாற்றி வரும் மாலதி என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் மாலதி நேற்று மாவட்ட வருவாய் அலுவலராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ராமமூர்த்தி, கலெக்டர் அலுவலக தாசில்தார்கள் பாலாஜி, பழனி மற்றும் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாலதி கூறுகையில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நலத்திட்டங்களுக்காக அளிக்கப்படும் மனுக்களை ஆராய்ந்து பரிசீலனை செய்து தகுதியுடையவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதமின்றி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.