தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 309 பேருக்கு பணிநியமன ஆணை
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 309 பேருக்கு பணிநியமன ஆணைகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
ராமநாதபுரம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 309 பேருக்கு பணிநியமன ஆணைகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
வேலை வாய்ப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சித்துறை மற்றும் மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் 100 சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்து தற்போது முதல் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் பணியாளர்களை தேர்வு செய்ய 102 நிறுவனங்கள் வருகை தந்துள்ளனர்.
பணி நியமன ஆணை
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் படித்த ஆண்கள், பெண்களுக்கு தொழில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்த வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய வருகிறார்கள். இதுபோன்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கல்வி தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை தேர்வு செய்திட வேண்டும். . இவ்வாறு பேசினார்.
வேலைவாய்ப்பு முகாமில் 2523 பேர் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 309 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், பயிற்சி சப் கலெக்டர் சிவானந்தம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், ராமநாதபுரம் தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம், இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜான், முதல்வர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.