பணி நியமன ஆணை வழங்கும் விழா
திருமங்கலம் பி.கே.என் கலை அறிவியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
திருமங்கலம்,
திருமங்கலம் பி.கே.என் கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வேலை வழங்குவதற்கான நேர்முகத் தேர்வை நடத்தின. இதில் அறிவியல் மற்றும் கலை அறிவியல் பிரிவை சேர்ந்த மாணவர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இதில் 96 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் கணேசன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் செல்வராஜ், கல்லூரி கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இளைஞர் நலத்துறை தலைவர் பாரிபரமேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நியமன ஆணையை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும் போது, பி.கே.என் கல்லூரி தொடங்கி 10-வது ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்றது. இதற்கு காரணம் கல்லூரி நிர்வாகம் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்பான செயல்பாடுகள் தான். தொடர்ந்து இந்தக் கல்லூரி தன்னாட்சி கல்லூரி ஆகவும் தேசிய தரச் சான்றிதழ் பெற்ற கல்லூரி ஆகவும் விளங்குவதற்கு நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து சிறப்பான சேவை செய்ய வேண்டும் என்றார்.. இந்த விழாவில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.