தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் :கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
தமிழ் செம்மல் விருது பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச் செம்மல் என்ற விருது கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்ச் செம்மல் விருது பெறுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
10-ந்தேதிக்குள்...
விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் அவர்கள் பற்றிய விவரக் குறிப்பு, 2 போட்டோ, அவர்களது தமிழ்ப்பணி விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
வருகிற 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தமிழ்ச் செம்மல் விருது வேண்டுவோர் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் ஏதும் இதற்கு முன் பெற்றிருக்கக் கூடாது. வயது முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக் காவலர், தமிழறிஞர் போன்ற நிதியுதவி பெற்று வருபவராக இருக்கக் கூடாது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.