மாணவிகளின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

காரிமங்கலம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறுவதற்கு உயர்கல்வி பயிலும் மாணவிகளின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-11-04 18:45 GMT

காரிமங்கலம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறுவதற்கு உயர்கல்வி பயிலும் மாணவிகளின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விண்ணப்பங்கள்

காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறுவதற்கு உயர்கல்வி பயிலும் மாணவிகளின் விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி என்பது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மிகச்சிறந்த உதவித்தொகையாகும். இந்த உதவித்தொகை உயர்கல்வி பயிலும் பெண்களுக்கான ஒரு முதலீடாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் செயல்படுத்தி உள்ளார். மாணவிகள் இந்த உதவித்தொகையை முதலீடாக கொண்டு உயர்கல்வி கற்பதற்கும், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தி கொள்வதற்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

கல்வி வளர்ச்சி

தர்மபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையை தாண்டி, முன்னேறி கொண்டிருக்கின்ற சிறப்பான மாவட்டமாக தர்மபுரி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது வளர்ச்சியடைந்த மாவட்டங்கள் எல்லாம் முன்பு ஒரு காலத்தில் சாதாரண நிலையில் இருந்த மாவட்டங்கள் தான். அங்குள்ள மக்களின் கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து வளர்ச்சிகளும் தொடர்ந்து ஏற்பட்டதன் காரணமாக தான் தற்போது வளர்ச்சியடைந்த மாவட்டங்களாக மாறியுள்ளன.

இதேபோல தான் தர்மபுரி மாவட்டம் தற்போது வளர்ந்து வருகின்ற மாவட்டமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே தான், கல்வி வளர்ச்சியில் நமது மாவட்டம் சிறந்த மாவட்டமாக உருவாகினால் தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் மேம்படும் மாவட்டமாக தர்மபுரி மாவட்டம் உருவாகும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட சமூகநல அலுவலர் ஜான்சிராணி, தாசில்தார் சுகுமார், அரசு மகளிர் கல்லூரி முதல்வர் மீனா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட மேலாளர் பூங்கோதை மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்