நள்ளிரவில் வீடு புகுந்தவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடி, உதை
வந்தவாசி அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்தவரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்தவரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடு புகுந்த ஆசாமி
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் ரோட்டு தெருவில் வசிப்பவர் ரேணுகோபால். அவர், நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் மேல் சட்டையை கழற்றி விட்டு இவரது வீட்டில் புகுந்துள்ளார்.
அப்போது சத்தம் கேட்ட ரேணுகோபால் குடும்பத்தினர் திடீரென கண் விழித்து பார்த்தபோது வீட்டின் உள்ளே மர்ம நபர் ஒருவர் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து 'திருடன்', 'திருடன்' என கூச்சலிட்டனர்.
கட்டி வைத்தனர்
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்து தப்பி ஓட முயன்றவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவரிடம் நீ யார் என்று கேட்டபோது தன்னுடைய பெயர் ரஜினி என்று கூறினார்.
இதற்கிடையே தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது பிடித்து வைத்திருந்த மர்ம நபரை பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த அவர் மயக்க நிலையில் இருந்தார்.
அவரை போலீசார் மீட்டு மயக்கத்தை தெளிவித்து நடத்திய விசாரணையில் அந்த நபர் வந்தவாசி பெரிய காலனியைச் சேர்ந்த குப்பன் மகன் ராமு என்ற ரஜினி (வயது 33) என்பது தெரிய வந்தது.
கைது
இதையடுத்து ரேணுகோபால் அளித்த புகாரின்பேரில் ராமு என்ற ரஜினியை வந்தவாசி தெற்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த அவரை வந்தவாசி அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.