கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன் - மதுரை ஐகோர்ட்டு

கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-06 08:23 GMT

மதுரை,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சியில் மான்ராஜ் எம்.எல்.ஏ. முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன், விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின்படி தங்கப்பாண்டியனை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அம்மையப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் மீது வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தங்கப்பாண்டியன் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தாக்கப்பட்ட விவசாயிக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாததால் தங்கப்பாண்டியனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வாரத்தில் ஒருநாள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்