கோவையில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானில் கலெக்டர் பங்கேற்பு
கோவையில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானில் கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை
கோவையில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானில் கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு மாரத்தான்
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் கோவை மாநகர், புறநகர் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
மாரத்தானை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மேலும் அவர்கள் மாரத்தானில் பங்கேற்று ஓடினர்.
உறுதிமொழி
மாரத்தான் ஓட்டமானது பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதானத்தில் தொடங்கி அவினாசி சாலை வழியாக ரேஸ்கோர்ஸ் சாலை சென்று ரெட்பீல்டு ரோடு வந்து மீண்டும் பி.ஆர்.எஸ். மைதானத்தில் நிறைவடைந்தது.
இதில் கேரளா டி.ஐ.ஜி.க்கள் அஜிதாபேகம், சதீஷ் பினோ, போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஷ், மதிவாணன், சுகா ஷிணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அங்கு அவர்கள் போலீசார் மற்றும் மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கல்லூரி மாணவிகள் பேரணி
அதைத்தொடர்ந்து தனியார் கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் கோவை மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் காலை 11 மணிளவில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது 2 நிமிடங்கள் சிக்னல் நிறுத்தப்பட்டு, கல்லூரி மாணவ- மாணவிகள் சிக்னலில் நின்று போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியாவாறு நின்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினர். அத்துடன் சிக்னல்களில் இருந்த ஒலிப்பெருக்கி மூலமும் போைத பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.