லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,
அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். உணவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, அலுவலங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ரூ.41லட்சம் பணம், 963 சவரன் தங்கம், 23,960 கிராம் வெள்ளி, ஒரு ஐபோஃன், கணினி, பெண்டிரைவ், ஹார்ட் டிஸ்க், வங்கியில் இருக்கக்கூடிய வங்கி பெட்டக சாவி, ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி, அறிக்கை வெளியிட்டது. சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டதை விட எனக்கு அதிகம் கடன் உள்ளது. எனது மகன்கள் இருவர் மருத்துவர்கள். அவர்களுக்கு இரு வங்கியில் பலகோடி கடன் வாங்கி தான் தஞ்சாவூரில் மருத்துவமனை கட்டுகிறோம்.
அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் வேகத்தை எவராலும் தடுத்திட முடியாது. இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதனால் அதிமுக தொண்டர்களை தொட்டு கூட பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.