ஓசூர்:-
ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனை சாவடி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் உள்வழி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது. இதன் வழியாக தினமும் கர்நாடகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்திற்குள் நுழைகின்றன.
இந்தநிலையில் நேற்று மாலையில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான 10 பேர் கொண்ட போலீசார் அதிரடியாக சோதனைசாவடியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.
கணக்கில் வராத பணம்
இந்த திடீர் சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 4 ஆயிரத்து 550 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சோதனையின் போது பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் புர்ஹானுதீன் என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த அதிரடி சோதனை ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.