அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2022-10-14 22:20 GMT

வீடு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு

திருச்சி பாலக்கரை பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கோட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் 8 போலீசார் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பயனாளிகளுக்கு வீடு ஓதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக புகார் வந்ததையடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டது.

ரூ.58 ஆயிரம் பறிமுதல்

அப்போது உதவி நிர்வாக பொறியாளர் முருகானந்தம் மற்றும் வீடு ஒதுக்கீடு அதிகாரியான கற்பகவிநாயகம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். மேலும் சோதனையில் உதவி நிர்வாக பொறியாளர் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.58 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு, அதிகாரிகளிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

பரிசு பொருட்கள் பெறுவதை...

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தடுக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.திருச்சி, கரூரில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்