அந்தியூர், டி.என்.பாளையம் பகுதியில் யானை தந்தங்கள் கடத்திய 11 பேர் கைது
அந்தியூர், டி.என்.பாளையம் பகுதியில் யானை தந்தங்கள் கடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
அந்தியூர், டி.என்.பாளையம் பகுதியில் யானை தந்தங்கள் கடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
சுற்றிவளைப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பெருமாபாளையம் பகுதியில் உள்ள செட்டியார் ஏரி பகுதியில் ஒரு கும்பல் திருட்டுத்தனமாக யானை தந்தம் விற்பதாக அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து வனவர் சக்திவேல் மற்றும் வனத்துறையினர் செட்டியார் ஏரி பகுதிக்கு சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும் வகையில் அங்கு 4 பேர் சுற்றிக்கொண்டு இருந்தார்கள். உடனே அந்த 4 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து சோதனை நடத்தியபோது, அவர்களிடம் ஒரு யானை தந்தம் இருந்தது. இதனால் அவர்களை வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள், நகலூர் ஈசப்பாறையை சேர்ந்த குருநாதன் (வயது 58), அண்ணமார்பாளையத்தை சேர்ந்த சேகர் (51), பர்கூரை சேர்ந்த முருகராஜ் (42), பர்கூர் மூலையூரை சேர்ந்த சித்தேஸ்வரன் ஆகியோர் என்பதும், அவர்கள் யானை தந்தத்தை கடத்தி விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்தார்கள். மேலும் அவர்கள் வைத்திருந்த 3 அடி நீளமுள்ள தந்தத்தையும் பறிமுதல் செய்தார்கள்.
டி.என்.பாளையம் வனச்சரகத்தில்...
இதேபோல் டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சாலைகளில் வனத்துறையினர் ரோந்து சென்றார்கள்.
அப்போது பெருமுகை ஊராட்சிக்கு உள்பட்ட கரும்பாறை வனப்பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துகொண்டு இருந்தார்கள். வனத்துறையினர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையை வாங்கி பார்த்தபோது அதில் 2 யானை தந்தங்கள் இருந்தன. உடனே இருவரையும் பிடித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
7 பேர் கைது
விசாரணையில் அவர்கள் பெருமுகை கரும்பாறையை சேர்ந்த பிரபுகுமார் (37), அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்த ராமசாமி (37) ஆகியோர் என்பதும் இருவரும் யானை தந்தங்களை விற்க கொண்டு சென்றதும் தெரியவந்தது.
கடந்த ஆண்டு டி.என்.பாளையம் அடுத்த விளாங்கோம்பை வனப்பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடந்ததாகவும், அந்த யானையின் தந்தங்களை கம்பனூர் காலனியை சேர்ந்த மாரச்சாமி (48), விளாங்கோம்பையை சேர்ந்த குமார் (42) மசனன் (43) ஆகிய 3 பேரும் சேர்ந்து வெட்டி மறைத்து வைத்துள்ளனர்.
இதேபோல் பெருமுகை கரும்பாறையை சேர்ந்த சந்திரன் (42) மற்றும் ரவிச்சந்திரன் (36) ஆகிய இருவரும் ஒரு தந்தந்தை பிரபுகுமார், ராமசாமியிடம் கொடுத்து விற்க சொன்னதும் தெரியவந்தது.
இதையடுத்து பிரபுகுமார், ராமசாமி, மாரச்சாமி, குமார், மசனன், சந்திரன், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் வனத்துறையினர் கைது செய்து 2 தந்தங்களையும் மீட்டார்கள்.
யானை தலையின் எலும்புக்கூடு
மேலும் மாரச்சாமி கும்பல் யானை தந்தத்தை வெட்டி எடுத்தபோது யானையை புதைத்து இருக்கலாம் என்று தெரிகிறது. அதனால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வனத்துறையினர் சென்று புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து யானை தலையின் எலும்புக்கூட்டை மட்டும் எடுத்து வந்துள்ளனர். அதை ஆய்வுக்கு அனுப்ப உள்ளனர். அதன் முடிவில் வெட்டி எடுக்கப்பட்ட தந்தங்கள் புதைக்கப்பட்ட யானையுடையதா? என்று தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தார்கள்.