`திராவிட மாடல் என்பதற்கு பதில் வேறு பெயர் பயன்படுத்தி இருக்கலாம்'-தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்தி இருக்கலாம் என்று புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2022-12-11 19:05 GMT

திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்தி இருக்கலாம் என்று புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

வரவேற்பு

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின்னர் கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தூத்துக்குடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டார். வரும் வழியில் அவர் நெல்லை விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

200 இடங்களில் மாநாடு

புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கடும் பாதிப்பு தடுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பலர் வீடுகளை, வாகனங்களை இழந்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள்.

ஜி20 மாநாட்டிற்கு தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா நாடு முழுவதும் 200 இடங்களில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதில், தெலுங்கானாவில் 6 இடங்கள், புதுச்சேரியில் ஒரு இடம், தமிழகத்தில் 4 இடங்களில் மாநாடு நடக்க உள்ளது.

திராவிட மாடல்

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி என்னை கிரண்பெடியுடன் ஒப்பிட்டு கூறி வருகிறார். அதை நான் விரும்பவில்லை. நான் கவர்னர் பணியை மட்டும் தான் செய்கிறேன். அரசியல்வாதியாக செயல்படவில்லை.

மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேனா என்பது குறித்து இப்போது கூற முடியாது.

திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்தி இருக்க வேண்டும். திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?

திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்