பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது: அண்ணாமலை கண்டனம்

தமிழக பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது நடவடிக்கைக்கு பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கண்டணம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-09 13:49 GMT

சென்னை:

தமிழக பா.ஜ.க. செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சவுதாமணி. இவர் கடந்த ஜனவரி மாதம் தனது 'டுவிட்டர்' பக்கத்தில், இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் அடையாளம் தெரியாத நபர் பேசிய வீடியோவை பகிர்ந்து, கருத்து பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து சவுதாமணி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் மீது மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுதாமணியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

இந்நிலையில் சவுதாமணி கைது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணியை தி.மு.க. அரசு பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருக்கிறது. சமூக ஊடகங்களில் யாரோ வெளியிட்ட பதிவை இவர் மற்றொருவருக்கு பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

'கருப்பர் கூட்டம் மூலம் தமிழ் கடவுள் முருகனை, கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தினார்கள். 'யூ டு புரூட்டஸ்' என 'யூ-டியூப்' சேனலில் தில்லை நடராஜர் நடனமாடும் கோலத்தை தரம் தாழ்த்தி விமர்சித்துள்ளார்கள். சமீபத்தில் மதுரையில் நடந்த ஒரு ஊர்வலத்தில் தமிழ் கடவுள்களை பற்றி மோசமாக விமர்சனம் செய்துகொண்டே ஊர்வலம் போனார்கள். சிலர் தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக பிரசங்கம் செய்கிறார்கள்.

தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்ட பிறகும் பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் சவுதாமணி கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். காழ்ப்புணர்ச்சியோடு இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ள தி.மு.க. அரசு உடனடியாக அவரை விடுதலை செய்யவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்