கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்பை கொள்முதல் செய்வதில் முறைகேடு - அண்ணாமலை குற்றச்சாட்டு
கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை,
திமுக அரசின் மீதான ஊழல் முறைகேடு புகார்களை 20 ஆம் தேதிக்கு பின்னர் தமிழக கவர்னரிடம் வழங்கப்போவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். தமிழ்நாடு அரசு சார்பில் 28 லட்சத்து 88 ஆயிரம் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுவதாகவும் இந்த தொகுப்பில் அதிக விலை உள்ள ஹெல்த் மிக்ஸ்-க்குப் பதிலாக 60 சதவீதம் விலை குறைந்த ஆவின் ஹெல்த் மிக்சை சேர்க்க முதலில் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இந்த முடிவு பின்னர் மாற்றப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாரளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.