முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு புதிய பெயரில் நுழைவுத்தேர்வு

முதுநிலை என்ஜினீயரிங் படிப்புக்கு புதிய பெயரில் நுழைவுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 26-ந் தேதி நடைபெற உள்ளது.;

Update:2023-01-29 05:26 IST

புதிய பெயரில்...

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும், அதே போல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் 'டான்செட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளே மேற்சொன்ன படிப்புகளில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற படிப்புகளுக்கான டான்செட் தேர்வு வருகிற மார்ச் மாதம் 25-ந் தேதி நடத்தப்பட உள்ளது. ஆனால் முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு நடத்தப்படும் டான்செட் தேர்வுக்கு பதிலாக புதிய பெயரில் தேர்வு நடத்தப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.

சி.இ.இ.டி.ஏ. நுழைவுத்தேர்வு

அதன்படி, அண்ணா பல்கலைக்கழக துறைகள், மண்டல வளாக கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு பொது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை (சி.இ.இ.டி.ஏ.) என்ற பெயரில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 26-ந் தேதி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த மத்திய அரசின் நிதியுதவி பெறும், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த சேர்க்கை முறையை மேற்கொள்ளலாம். சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரி சேர்க்கை செயல்முறைக்கும் இந்த நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணையும் பயன்படுத்தலாம்.

விண்ணப்பப்பதிவு

இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் நுழைவுத்தேர்வை எழுத http://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு செய்ய வேண்டும்.

அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பதிவு செய்யலாம். தேர்வை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் 14 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு, சந்தேகங்களுக்கு tanceeta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்