அண்ணா மறுமலர்ச்சி, வேளாண்மை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி, வேளாண்மை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2022-12-09 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது, மழைநீரை சேகரிப்பதற்காகவும், மண் அரிப்பை தடுப்பதற்காகவும் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகள், கூட்டுறவுத்துறை மூலம் வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ள நிலை, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டுள்ள விவரம், புதியதாக கட்டப்பட வேண்டிய அங்கன்வாடி மையம், குழந்தை திருமணத்தை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பொதுமக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இடைநின்ற பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களை மீண்டும் கல்வி பயில மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட விவரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பணிகளை விரைந்து முடிக்க

மேலும் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள், குடும்ப அட்டை வழங்கப்பட்ட விவரம், குடிமைப்பொருள் வினியோகம் செய்யப்பட்ட விவரம், வட்டார அளவில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட பணிகள், நிறைவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டப்பணிகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதோடு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காஞ்சனா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்