அண்ணா சைக்கிள் போட்டிகள்
நாகை மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அண்ணா சைக்கிள் போட்டிகள் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
நாகை மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அண்ணா சைக்கிள் போட்டிகள் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அண்ணா சைக்கிள்போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டுப்பிரிவால் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி நாளை காலை 7 மணிக்கு நாகை மீன்வள பொறியியல் கல்லூரியிலிருந்து தொடங்கி கங்களாஞ்சேரி ரோடு பெருஞ்சாத்தான்குடி வரை சைக்கிள் போட்டி நடத்தப்பட உள்ளது.
போட்டிகள் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது.
பரிசுகள்
3 பிரிவுகளாக நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியாவில் தயாரான சைக்கிள்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இப்போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 5ஆயிரமும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், , 3-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2ஆயிரமும், 4 முதல் 10-ம் இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால் போட்டியில் கலந்து கொள்பவர்கள் அவரவர் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டி தொடங்கும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 13, 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் அதிக அளவில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.