கரைவலை மீன்பிடிப்பில் ஆர்வம் காட்டும் மீனவர்கள்

வாலிநோக்கம் கடல் பகுதியில் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

Update: 2022-12-17 18:45 GMT

வாலிநோக்கம்,

வாலிநோக்கம் கடல் பகுதியில் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கரைவலை மீன்பிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் என்பது பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. அதுபோல் தற்போது மீன்பிடி தொழிலில் நாட்டுப்படகு, விசைப்படகு மற்றும் அதிநவீன வசதிகளுடன் பல படகுகள் வந்துள்ள போதிலும் சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியில் இன்னும் மீனவர்கள் பழமையான கரைவலை மீன்பிடிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் வாலிநோக்கம் கடல் பகுதியில் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் கரைவலை மீன்பிடிப்பு சீசன் ஆகும்.

இந்த நிலையில் நேற்று வாலிநோக்கம் கடல் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்களுக்காக வீசப்பட்டிருந்த கரைவலை கடற்கரையில் நின்றபடி மீனவர்களுக்கே உரிய பாடல்களை பாடியபடி சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நின்றபடி கரைக்கு இழுத்தனர்.

குறைவான மீன்கள்

கரைவலையில் சீலா, மாவுலா, சூடை, பாறை உள்ளிட்ட பல வகையான மீன்களும் சிக்கி இருந்தன. இதுகுறித்து வாலிநோக்கம் பகுதியைச் சேர்ந்த மீனவர் முகமது கூறியதாவது:-

ஆண்டுதோறும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் கரைவலை மீன்பிடிப்பு சீசனாகும். இந்த ஆண்டு கரைவலை மீன்பிடிப்பு சீசன் தொடங்கி 1½ மாதம் முடிந்து விட்டது. கரைவலை மீன்பிடிப்பில் மீன்கள் வரத்து குறைவாகவே உள்ளது. தற்போது சீலா மீன் சீசன் நடைபெற்று வரும் நிலையிலும் சீலா மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. மற்ற கடல் பகுதியை விட இந்த கடல் பகுதியில் கரைவலை மீன்பிடிப்பில் கிடைக்கும் நெய் மீன் என்று சொல்லக்கூடிய சீலா மீன் அதிக ருசியாகவே இருக்கும். அதனால் வெளியூர்களில் இருந்தும் வந்து வியாபாரிகளும் பொதுமக்களும் நேரடியாகவே வாலிநோக்கம் கடற்கரைக்கு வந்து கரைவலையில் கிடைக்கும் சீலா மீன்களை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி செல்வது வழக்கம்.

அதுபோல் குறிப்பாக வாலிநோக்கம் கடல் பகுதியில் கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக தூத்துக்குடி பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசைப்படகுகளை தடுத்து நிறுத்த வேண்டும்,

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்