நிலம் விற்ற பணத்தை தராததால் ஆத்திரம்: தந்தையை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசிய வாலிபர் - 2 பேர் படுகாயம்
நிலம் விற்ற பணத்தை தராததால் ஆத்திரத்தில் வாலிபர் தந்தையை குறிவைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் தனது நிலத்தை விற்ற பணத்தில் ரூ.3 லட்சத்தை தனக்கு தர வேண்டும் என அவருடைய மகன் அருண் (வயது 30) கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பன்னீர் செல்வம் மகனுக்கு பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் தந்தை- மகன் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அருண் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
பின்னர் மைத்துனர் பிரவீன் (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த அருண் தந்தையை குறிவைத்து வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
நாட்டு வெடிகுண்டு வீசியதில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அருணின் சித்தப்பா வெற்றி வேந்தன் (55), அருணின் தங்கை ரேக்கா (25) ஆகியோருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைகாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் ஏதேனும் நாட்டு வெடிகுண்டு இருக்குமா என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்ததில் வீட்டில் 4 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
பின்னர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 வெடிகுண்டுகளை மீட்டு போலீசார் அதை செயலிழக்க எடுத்து சென்றனர். நாட்டு வெடிகுண்டு வீசி தப்பி ஓடிய அருண் மற்றும் பிரவீன் ஆகியோரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சொந்த வீட்டின் முன்பு வாலிபர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.