படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் ஆத்திரம்: மாநகர பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர்கள்
படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் ஆத்திரத்தில் மாநகர பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.;
சென்னை எண்ணூர் இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜான் (வயது 46). மாநகர பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு பிராட்வேயில் இருந்து எண்ணூர் நோக்கி பஸ்சை ஓட்டிச்சென்றார். எண்ணூர் விரைவு சாலையில் பட்டினத்தார் கோவில் தெரு சந்திப்பு அருகே சென்றபோது, 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பஸ்சில் ஏறி, படிக்கட்டில் தொங்கியபடியும், தரையில் கால்களை உரசியபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதனை கண்டித்த டிரைவர் ஜான், படிக்கட்டில் தொங்காமல் அனைவரும் பஸ்சுக்குள் ஏறி வரும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள், டிரைவர் ஜானின் மார்பில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடிவருகிறார்கள்.