கள்ளத்தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்: கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலன்

பலத்த தீக்காயங்களுடன் லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update:2024-04-25 19:40 IST

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி லைன் கொல்லையை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி லட்சுமி (வயது 40). இவர் நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் பின்வருமாறு:-

லட்சுமிக்கும், கிருஷ்ணகிரி பாத்திமா நகரை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் மாதவன் (45) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனிடையே மாதவனுக்கு மற்ற பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கருதி லட்சுமி அவரை தவிர்த்து வந்தார். இதனால் அவர் தொடர்ந்து லட்சுமிக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

இதனிடையே நேற்று இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற லட்சுமியை பின்தொடர்ந்து சென்ற மாதவன் என்னுடன் பழகாத நீ வேறு யாருடனும் இனி பழக கூடாது. இத்தோடு செத்து போ என்று கூறி அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மாதவனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளத்தொடர்பை கைவிட்டதால் அரசு பஸ் கண்டக்டர் பெண்ணை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்