தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தலைவாசல் வட்டார அங்கன்வாடி அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் காசாம்பு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி உயர்வு, காலிபணியிடங்கள் நிரப்புதல், சிலிண்டர் முழுத் தொகை வழங்குதல், மின் கட்டணம் அரசு ஏற்க வேண்டும். கோடை விடுமுறை விட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் வட்டார தலைவர் தனலட்சுமி, வட்டார செயலாளர் கல்யாணி, வட்டார பொருளாளர் பேபி உள்பட அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். பில்லில் உள்ள சிலிண்டர் முழு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்ககைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சடையம்மாள், பூவாயி, காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.